தூக்கில் தொங்கியப்படி கிடந்த பெண் பிணம் மீட்பு

பேளூரில் வீட்டில் மர்மமான முறையில் பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டார் என பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2023-07-13 22:26 GMT

ஹாசன்:-

வரதட்சணை கொடுமை

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா அரேஹள்ளி அருகே மூரேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி அனிதா (வயது 27). இவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கணவன்-மனைவி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக யோகேஷ், கூடுதல் வரதட்சணை கேட்டு அனிதாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்தில் பலமுறை பேசி தீர்த்து வைக்கப்பட்டது. மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி பலமுறை அனிதாவை யோகேஷ் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அனிதாவின் பெற்றோரும் சமாதானம் செய்து வந்தனர்.

தூக்கில் பிணம்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிதா தனது பெற்றோருக்கு போன் செய்து, வரதட்சணை கேட்டு கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி கதறி அழுதார். இதையடுத்து அவரது பெற்றோர் அனிதாவை சமாதானம் செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிதா, தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை என புகார்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அனிதாவின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அனிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவர்கள் பேளூரில் போலீசில், தங்கள் மகள் அனிதாவை யோகேஷ் அடித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்