காதல் திருமணம்: மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் சுட்டுக்கொன்ற பெண்ணின் குடும்பத்தினர் - கொடூர சம்பவம்

சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

Update: 2024-01-10 07:32 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவ்டொலியா கிராமத்தை சேர்ந்தவர் பப்பு சிங். இவருக்கு திராஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி (வயது 23) என்ற மகளும் உள்ளனர்.

சாந்தினி குமாரியும் அதேபகுதியை சேர்ந்த சந்தன்குமார் (வயது 40) என்பவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு பப்பு சிங் எதிர்ப்பு தெரிவிக்க, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சந்தன்குமாரும் சாந்தினியும் திருமணம் செய்தனர்.

இதையடுத்து, ஊரை விட்டு வெளியேறிய இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ரோஷ்னி குமாரி (வயது 2) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் தங்கள் குழந்தையுடன் நேற்று மாலை 5 மணியளவில் நவ்டொலியா கிராமத்திற்கு வந்துள்ளனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட தன் மகள், மருமகன், பேத்தியுடன் ஊருக்குள் வந்ததை கண்ட சாந்தினியின் தந்தை பப்பு சிங் 3 பேரையும் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ஆத்திரம் அடங்காத பப்புசிங் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் மகள், மருமகன், பேத்தி என 3 பேரையும் நடுத்தெருவில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

அப்போது அங்கு வந்த திராஜ் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சகோதரி சாந்தினி குமாரி, அவரின் கணவன் சந்தன்குமார், மகள் ரோஷ்னி குமாரி மீது சரமாரியாக சுட்டார். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதையடுத்து,  பப்பு சிங் மற்றும் அவரது மகன் திராஜ் சிங்கும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்