கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணை வாபஸ் - கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்

2018-ஆம் ஆண்டு டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

Update: 2023-11-24 07:17 GMT

பெங்களூரு, 

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் 2018-ஆம் ஆண்டு பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெறுவதற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு இதுகுறித்து மந்திரி எச்.கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த முடிவு குறித்து மந்திரி எச்.கே.பாட்டீல் கூறியதாவது, "கடந்த பாஜக அரசால் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மந்திரிசபை கூட்டத்தில் மிக கவனமாக ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் இருந்த அட்வகேட் ஜெனரல் மற்றும் தற்போதைய அட்வகேட் ஜெனரல் ஆகியோருடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கும் பாஜக அரசின் முடிவு தவறானது என தெரியவந்ததால், அதனை திரும்ப பெற மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது." என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், "வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 577 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கை கூட சிபிஐ விசாரிக்கவில்லை. அனைத்து வழக்குகளையும் மாநில காவல்துறையினரே விசாரித்து வருகின்றனர். அவற்றை எல்லாம் கருதியே டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ விசாரணையை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளோம்." என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்