ரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றால் கைது செய்யப்படுவாரா? பிரேசில் அதிபர் பதில்

ரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்றால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பிரேசில் அதிபர் பதில் அளித்து உள்ளார்.

Update: 2023-09-10 14:04 GMT

புதுடெல்லி,

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ள ரஷியா, உக்ரைனில் உள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோத வகையில் கடத்தி, போர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக சர்வதேச குற்ற நீதிமன்றம் கடந்த மார்ச்சில், ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.

ஆனால், எந்த போர் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் உக்ரைனிய குழந்தைகளை கட்டாயப்படுத்தி எடுத்து கொள்ளவில்லை என்றும் ரஷியா மறுத்தது. இந்த கைது வாரண்ட் எதிரொலியாக, அவர் சர்வதேச நாடுகளுக்கு செல்லும்போது கைது செய்யப்பட கூடிய சூழல் உள்ளது.

இதனையடுத்து, சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளாமல் புதின் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை. இதேபோன்று, இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ரஷியாவின் வெளியுறவு மந்திரி லாவ்ரவ் மாநாட்டில் கலந்து கொண்டார்.

டெல்லியில் 2 நாட்கள் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான இன்று, அதன் தலைமைத்துவம் முறைப்படி பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும். இதில், பங்கேற்க புதின் அழைக்கப்படுவாரா? என பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சில்வா, அடுத்த ஆண்டுக்கான கூட்டத்திற்கு புதின் அழைக்கப்படுவார். புதின் கலந்து கொண்டால் அவர் கைது செய்யப்படமாட்டார் என கூறியுள்ளார். எனினும், அந்த கூட்டத்தில் புதின் பங்கேற்பாரா? என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்