அதானியில் மகேஷ் குமட்டள்ளியை வீழ்த்துவாரா லட்சுமண் சவதி?
கர்நாடகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. இந்த மாவட்டத்தில் 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முக்கியமான தொகுதி அதானி. மராட்டிய எல்லையில் இந்த அதானி தொகுதி அமைந்துள்ளது.
அதானி சட்டசபை தேர்தலில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2019-ம் ஆண்டு வரை 15 சட்டசபை பொது தேர்தலும், ஒரு இடைத்தேர்தலும் நடந்துள்ளன. இதில் 9 சட்டசபை தேர்தல்களில் காங்கிரசும், 3 சட்டசபை தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா கட்சி, ஜனதாதளம் கட்சி தலா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 1952-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை காங்கிரசின் கோட்டையாக இருந்த அதானி தொகுதியை கடந்த 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கைப்பற்றியது. அதன்பிறகு 3 முறை அதாவது 2004, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக பா.ஜனதா கைப்பற்றியது. அதன்பிறகு கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் வெற்றி வாகை சூடியது. இதனால் அதானி தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதா இரண்டு கட்சிகளும் பலமாக திகழ்கிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சியை பொறுத்தவரை இங்கு பலவீனமாக உள்ளது. இதனால் அதானி தொகுதியில் இரு தேசிய கட்சிகள் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக அதானி உள்ளது. ஏனெனில் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். காங்கிரஸ் சார்பில் அவர், அதானி தொகுதியில் களமிறங்குகிறார். லிங்காயத் சமூகத்தில் பலம் வாய்ந்த தலைவராக திகழம் லட்சுமண் சவதி, பா.ஜனதாவில் இருந்தபோது கடந்த 2004, 2008, 2013-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அதானி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மகேஷ் குமட்டள்ளியிடம் லட்சுமண் சவதி தோல்வி அடைந்தார். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய முக்கிய காரணமான ரமேஷ் ஜார்கிகோளியின் தீவிர ஆதரவாளரான மகேஷ் குமட்டள்ளி, கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து காங்கிரசில் இருந்து விலகி ரமேஷ் ஜார்கிகோளியுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதையடுத்து 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதானி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு மகேஷ் குமட்டள்ளி வெற்றி பெற்றிருந்தார். அந்த இடைத்தேர்தலில் போட்டியிட லட்சுமண் சவதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவரை சமாதானப்படுத்த, லட்சுமண் சவதிக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவி வழங்கியது.
தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனக்கு அதானி தொகுதியில் டிக்கெட் வழங்க வேண்டும் என்று லட்சுமண் சவதி பா.ஜனதா மேலிடத்திடம் கேட்டு வந்தார். அதே நேரத்தில் தனது ஆதரவாளரான மகேஷ் குமட்டள்ளிக்கு தான் அதானியில் சீட் வழங்க வேண்டும் என்று ரமேஷ் ஜார்கிகோளி பா.ஜனதா மேலிடத்தை வற்புறுத்தினார். அவரது மிரட்டலுக்கு அடிபணிந்த பா.ஜனதா, அதானியில் மகேஷ் குமட்டள்ளிக்கு வாய்ப்பு அளித்தது. இதனால் அதிருப்தி அடைந்த லட்சுமண் சவதி, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து போட்டியிடுகிறார். லட்சுமண் சவதி, வடகர்நாடகத்தில் செல்வாக்கு மிக்கவராகவும், லிங்காயத் சமூகத்தின் பலம் வாய்ந்த தலைவராகவும் பார்க்கப்படுகிறார். அவர் பா.ஜனதாவில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சசிகாந்த் பதசாலகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 3 கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் அதானி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். லட்சுமண் சவதி துணை முதல்-மந்திரியாக இருந்தும் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் அங்கு அதிகம் வசிக்கும் லிங்காயத் மக்கள் அவருக்கு ஆதரவாக இருப்பது லட்சுமண் சவதிக்கு சாதகமான அம்சமாகும். மகேஷ் குமட்டள்ளியை பொறுத்தவரை அதானி தொகுதியில் செல்வாக்கு இருந்தாலும், அவர் கடந்த 5 ஆண்டுகளில் எதுவும் செய்யாதது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இது அவருக்கு பாதகமாக அமையலாம்.
அதானி தொகுதியில் மகேஷ் குமட்டள்ளியை வீழ்த்தி லட்சுமண் சவதி வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
அதானி தொகுதியில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை பொதுத்தேர்தல் மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் நிலவரம் பின்வருமாறு:-
ஆண்டு வெற்றி தோல்வி
1972 ஆனந்த்ராவ் அப்பசாப் தேசாய்(காங்.)-25,532 விரன்கவுடா பட்டீல்(என்.சி.ஓ.)-15,556
1978 பவர் தேசாய் சித்தராஜ்(காங்.)-27,214 லீலாதேவி பிரசாத்(ஜனதா கட்சி)-22,394
1983 பவர் தேசாய் சித்தராஜ்(காங்.)-24,336 ஆலகவுடா பரம்கவுடா காகே(ஜனதா கட்சி)-19,795
1985 லீலாதேவி பிரசாத்(ஜனதா கட்சி)-36,983 யஸ்வந்த்ராவ்(காங்.)-27,409
1989 ஷேத்சயல்(காங்.)-31,144 வி.எல்.பட்டீல்(ஜனதாதளம்)-24,130
1994 லீலாதேவி பிரசாத்(ஜனதாதளம்)-27,126 ஈரப்பா மாரப்பா(காங்.)-20,313
1999 ஷாகஜான் இஸ்மாயில்(காங்.)-29,020 லட்சுமண் சவதி(சுயே.)-25,911
2004 லட்சுமண் சவதி(பா.ஜ.க.)-59,578 ஷாகஜான் இஸ்மாயில்(காங்.)-28,325
2008 லட்சுமண் சவதி(பா.ஜ.க.)-56,847 கிரண்குமார்(காங்.)-35,179
2013 லட்சுமண் சவதி(பா.ஜ.க.)-74,299 மகேஷ் குமட்டள்ளி(காங்.)-50,528
2018 மகேஷ் குமட்டள்ளி(காங்.)-82,094 லட்சுமண் சவதி(79,763)
2019 மகேஷ் குமட்டள்ளி(பா.ஜ.க.)-99,203 பாலசந்திர மங்கசுளி(பா.ஜ.க.)-59,214