பிரதமர் பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்குமா? காங்கிரஸ் பதில்

பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Update: 2024-06-08 13:07 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா 240 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சிஅமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கியது. நேற்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஜனாதிபதியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க ஜனாதிபதியும் அழைப்பு விடுத்த நிலையில், நாளை பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார். பிரதமர் பதவியேற்கும் விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. ‛இந்தியா ' கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு வரும் போது அது குறித்து சிந்திப்போம்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்