இந்திய குடும்பங்களின் செல்வம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதை தடுப்போம்- காங்கிரஸ்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடும்பங்களின் செல்வம், பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Update: 2024-05-10 03:19 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜூன் 4-ந் தேதி காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவோம். அதில், சாமானிய இந்திய குடும்பங்கள் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பதை உறுதி செய்வோம். இந்திய குடும்பங்களின் செல்வம், பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

150 ஆண்டுகளுக்கு முன்பு, தாதாபாய் நெளரோஜி, இந்தியர்களின் வளங்கள் எப்படி பறிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை விளக்கினார்.அதுபோல், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இந்திய குடும்பங்களின் செல்வம், மோடி குடும்பத்துக்கு செல்வதை பார்த்து வருகிறோம். இதெல்லாம் பிரதமர் மோடி தனது நண்பர்களுக்கு ஆதரவாக பின்பற்றிய கொள்கைகளின் விளைவு ஆகும்.

மோடியின் அநீதி காலத்தில் ஒவ்வொரு நாளும் இந்த செல்வம் செல்வது புதிய சாதனையை எட்டி வருகிறது. கடந்த 7-ந் தேதி, தேசிய கணக்குகள் புள்ளியியல் வெளியிட்ட அறிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.9 லட்சம் கோடி குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளது.மோடி அரசின் தவறான, திறமையற்ற பொருளாதார கொள்கைகளால், சேமிப்பு குறைந்ததுடன், கடன் வலையிலும் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.

பெண்களின் தாலியை பறித்ததற்கு பா.ஜனதா அரசே பொறுப்பு. அதன் பொருளாதார தோல்விகளால், தங்க நகைக்கடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நிலுவையில் உள்ள தங்க நகைக்கடன் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குடும்பங்களின் கடன் சுமை, ரூ.7 லட்சம் கோடியில் இருந்து ரூ.14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2014-ம் ஆண்டுக்கு பிறகு ஏதேனும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றால், அது பிரதமரின் நண்பர்களான தொழில் அதிபர்களின் வளர்ச்சிதான். இன்று, 70 கோடி ஏழைகளின் மொத்த செல்வத்தை விட 21 கோடீஸ்வரர்கள் அதிக செல்வத்தை வைத்துள்ளனர்.

இந்தியாவின் 40 சதவீத வளங்கள், வெறும் 1 சதவீதம் பேரின் கைகளில் உள்ளன. இது, பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்ததை விட அதிகம். உலகிலேயே மோசமானது.பிரதமரின் நண்பர்கள் செழிப்படைகின்றனர். சாதாரண இந்திய குடும்பங்கள், பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி., திட்டமிடப்படாத பொதுமுடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்