தொடர் கனமழை எதிரொலி: கர்நாடக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

தொடர் கனமழை எதிரொலியாக கர்நாடக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-08-08 17:17 GMT

குடகில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூர்நாடு - விராஜ்பேட்டை இடையே உள்ள பேட்ரி பாலத்தை முத்தமிட்டபடி காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை படத்தில் பார்க்கிறீர்கள்.

பல்லாரி: தொடர் கனமழை எதிரொலியாக கர்நாடக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

புராதன சின்னங்கள் மூழ்கின

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. இதனால் மாநிலத்தில் ஓடும் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த சில தினங்களாக விஜயநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒசப்பேட்டையில் உள்ள துங்கபத்ரா அணைக்கு தொடா்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று துங்கபத்ரா அணையில் இருந்து 10 மதகுகள் வழியாக வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் துங்கபத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன்காரணமாக ஹம்பியில் உள்ள புராதன சின்னங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் ஹம்பி-கம்பளியை இணைக்கும் ஆற்றுப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. அந்த பாலம் மூழ்க இன்னும் 2 அடி தான் பாக்கி உள்ளது. இதனால் அந்த பாலம் விரைவில் மூழ்கும் நிலை உள்ளது. அந்த பாலம் மூழ்கி விட்டதால் ஹம்பி-கம்பளி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. துங்கபத்ரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

இதுபோல பெலகாவியிலும் கனமழை பெய்து வருகிறது. பெலகாவி டவுன் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதுபோல அந்த பகுதியில் உள்ள கிளினிக்கிற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பெலகாவி அருகே சகாப்புராவில் கனமழைக்கு நேற்று 2 வீடுகள் இடிந்து விழுந்து முற்றிலும் சேதம் அடைந்தது. பெலகாவி டவுன் சிவாஜிநகர் பகுதியில் 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

யாதகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள பசவசாகர் அணை நிரம்பி உள்ளது. அந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் பாய்ந்தோடுகிறது. இதனால் கிருஷ்ணா ஆற்றங்கரையையொட்டி உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ராமநகர் அருகே உள்ள கொண்டபுரா-பானஹள்ளி கிராமத்தை இணைக்கும் பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஹாரங்கி அணை

இதுபோல் கர்நாடக மலைநாடு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2855 அடி கொள்ளளவு கொண்ட ஹாரங்கி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி தனது முழு கொள்ளளவை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 860 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. ஹாரங்கி அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்து இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

3-வது முறையாக நிரம்பியது

கடந்த ஒரே மாதத்தில் மட்டும் ஹாரங்கி அணை 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இதைவிட அதிக அளவில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இருப்பதாகவும் அணை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே குஷால் நகர் படாவனே பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், அரசு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அருவிகள்

இதுபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. நேற்றும் சிக்கமகளூருவில் கனமழை பெய்தது. இதனால் தரைப்பாலம் மூழ்கியது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராளமான இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கடிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஆற்றுப்பாலங்களிலும் பாதுகாப்பு கருதி போக்குவரத்து வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மக்கள் சரியான போக்குவரத்து வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகிறார்கள்.

மேலும் சார்மடி மலையில் புதிதாக அருவிகள் உருவாகி உள்ளன. தொடர் கனமழை காரணமாக இந்த அருவிகள் உருவாகி இருக்கின்றன. சார்மடி மலைப்பாதையில் அருவிகள் தண்ணீர் அழகுடன் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் அவர்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு அருவிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர்.

கனமழை எச்சரிக்கை

இதுபோல் தொடர் கனமழை காரணமாக சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா புரதாலா பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. தடுப்பணையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழியும் அழகை பார்க்க அங்கு ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.

கனமழைக்கு உத்தர கன்னடா மாவட்டத்தில் 862 வீடுகளும், ஹாசனில் 1,115 வீடுகளும், சிக்கமகளூருவில் 298 வீடுகளும், உடுப்பியில் 373 வீடுகளும், ஹாவேரியில் 1,248 வீடுகளும், குடகில் 68 வீடுகளும், பெலகாவியில் 565 வீடுகளும் சேதம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வடகர்நாடகத்தில் சில மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்