அமைதியாக உள்ள காஷ்மீரில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது ஏன்? - மத்திய மந்திரி அனுராக் தாகூர் கேள்வி
அமைதியாக உள்ள காஷ்மீரில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது ஏன்? என மத்திய மந்திரி அனுராக் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் இணைந்துள்ளனர். இந்த நடைபயணம் அடுத்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.
இந்நிலையில், ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மத்திய மந்திரி அனுராக் தாகூர் பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு பகுதிக்கும் தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுக்கு 1.6 கோடி பேர் ஜம்மு காஷ்மீருக்கு வருகின்றனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்கவிட முடிகிறது. 1992ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடியை பறக்கச் செய்தனர்.
காங்கிரஸ் ஆட்சியிலிருந்த அக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்தன. 2011 யாத்திரையில் ஈடுபட்ட பாஜக தலைவர்களை காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையிலடைத்தது. அமைதியாக உள்ள காஷ்மீரில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது எதனால்? என அனுராக் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.