ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு - மம்தா பானர்ஜி

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-15 11:55 GMT

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டார்.

ஆனாலும், பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம். இது நல்ல தொடக்கம். பல மாதங்கள் கழித்து நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோன்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நாங்கள் மீண்டும் நடத்துவோம்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்