குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-21 10:12 GMT

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து 20 ஆண்டுகளாக பாஜக கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், ஆம்.ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, தற்போது குஜராத் மீது கவனம் செலுத்தி வருகிறது.

அந்த மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது குஜராத் மாநிலம் சூரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்,

நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியை அறிவித்தார். அதாவது குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், 24 மணிநேரமும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் உறுதியாக கூறினார். மேலும் டிசம்பர் 31, 2021 வரை நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்