பா.ஜனதாவின் சதி திட்டத்துக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்; சித்தராமையா பேச்சு
பா.ஜனதாவின் சதி திட்டத்துக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-
விசாரணை நடத்துகிறார்கள்
அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் மாதம் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தினோம். இப்போது சோனியா காந்தியை அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் விசாரணைக்கு பயப்படுவது ஏன் என்று பா.ஜனதா தலைவர்கள் கேள்வி கேட்கிறார்கள். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை. ஆனால் மோடி பிரதமரான பிறகு விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த விசாரணை அமைப்புகள் காங்கிரஸ் தலைவர்களை இலக்காக வைத்து செயல்பட்டு வருகின்றன.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை அழிக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தும் அளவுக்கு எந்த தவறுகளும் நடைபெறவில்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. வழக்கு பதிவு செய்யாமல் எந்த விசாரணை அமைப்பும் சம்மன் அனுப்ப முடியாது. சட்டம் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று. தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தப்படுவதால் தான் இங்கு ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துகிறோம்.
சர்வாதிகாரத்தில் நம்பிக்கை
பா.ஜனதாவினர் சர்வதிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஹிட்லரை பாராட்டி பேசியவர்கள். 97 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை பொறுப்புக்கோ அல்லது முக்கிய பொறுப்புக்கோ ஒரு குறிப்பிட்ட மேல் சாதியினரை தவிர வேறு யாராவது நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா?.
சிறுபான்மையினர் அல்லது ஆதிதிராவிடர்களை அந்த பதவியில் அமர வைத்தனரா?. காங்கிரசாரின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். இந்த மனுவாதி அமைப்பினர் அமைதியாக இருக்க மாட்டார்கள். நாட்டை பாழாக்கி வருகிறார்கள். பொய் வழக்கை போட்டு காங்கிரஸ் தலைவர்களை மன ரீதியாக பலவீனப்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. இது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தெரியும். பா.ஜனதாவின் சதித்திட்டத்திற்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.