சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் - ராகுல் காந்தி டுவீட்

நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை எழுப்பிய போது, ​​நிதி-மந்திரி கேலி செய்து சிரித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

Update: 2024-07-29 12:47 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கிய நிலையில், 23-ம் தேதி 2024-2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் இன்று அனல் பறந்தது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், "இன்று நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை நான் எழுப்பிய போது, நிதி-மந்திரி இந்த சீரியசான பிரச்சினையை கேலி செய்து சிரித்தார்.

நாட்டின் 90 சதவீத மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியப் பிரச்சினைக்கு இப்படி அலட்சியமாகப் பதில் சொல்வது பா.ஜனதாவின் நோக்கத்தையும், மனநிலையையும், அம்பலப்படுத்தி உள்ளது.

எந்த விலை கொடுத்தாலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் என்று பா.ஜனதாவிடம் கூற விரும்புகிறேன்" என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்