மத்தியிலும்-மாநிலத்திலும் மோசமான பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள்

மத்தியிலும்-மாநிலத்திலும் உள்ள மோசமான பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-11-06 22:56 GMT

பெங்களூரு:

காப்பாற்ற முடியும்

கர்நாடக காங்கிரஸ் சார்பில் சர்வோதயா மாநாடு பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-

கட்சியின் கொள்கையில் பிடிப்புடன் இருப்பவர்கள் எப்போதும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். அதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கொள்கை-கோட்பாட்டின்படி பணியாற்ற வேண்டும். பிரதமர் மோடி காங்கிரசை பார்த்து, 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். நாம் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் நாட்டை காப்பாற்றி இருக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே காங்கிரஸ் தான். அம்பேத்கர் நமக்கு உருவாக்கி கொடுத்துள்ள அரசியல் சாசனம் இருந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

அகற்ற வேண்டும்

அரசியல் சாசனம் இருந்தால் தான் பிரதமர் மோடி, அமித்ஷா ஆட்சியில் இருக்க முடியும். அதனால் அரசியல் சாசனம், ஜனநாயகம், நாடு காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக மக்களை ஒன்றுதிரட்டி போராட வேண்டும். மத்தியிலும், கர்நாடகத்திலும் இருக்கும் மோசமான அரசுகளை அகற்ற வேண்டும். இந்திரா காந்தி திடமான முடிவு எடுத்து செயல்படாமல் இருந்திருந்தால் இன்று வங்காளதேசம் என்று ஒரு நாடு இருந்திருக்காது.

அதே போல் வெளியுறவு கொள்கையை வகுத்தது நேரு. பா.ஜனதாவின் அடிக்கடி நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தியை விமர்சிப்பதை கைவிட வேண்டும். காங்கிரசை குடும்ப கட்சி என்று பா.ஜனதா தலைவர்கள் விமா்சிக்கிறார்கள். எங்கள் கட்சியை பற்றி பா.ஜனதாவினர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

உயர முடியும்

சுயபலத்தால் கட்சிக்காக பணியாற்றினால் நமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். காங்கிரஸ் 2 ஆக உடைந்தபோது கலபுரகியில் கட்சி தலைவர் இருக்கவில்லை. அப்போது நான் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தேன். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் கலபுரகியில் காங்கிரஸ் தலைவர் பதவி எனக்கு கிடைத்தது.

நாங்கள் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கட்சியை வலுப்படுத்தினோம். அதன் பிறகு சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு டிக்கெட் கிடைத்தது. இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி எனக்கு கொடுத்துள்ளார். ஒரே நாளில் நான் உயர்ந்த பதவிக்கு வந்துவிடவில்லை. படிப்படியாக உயர்ந்து கட்சியின் உயர்ந்த பதவியை அடைந்துள்ளேன். ஆனால் இன்று கட்சிக்கு வந்த உடனேயே பதவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இலக்கை நிர்ணயித்து பணியாற்றினால் மட்டுமே உயர முடியும்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்