காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் எம்.எஸ்.பி. சட்டத்தை கொண்டு வருவோம் - மல்லிகார்ஜுன கார்கே
வனப்பாதுகாப்பு தொடர்பாக மோடி அரசு கொண்டுவந்த சட்ட திருத்தங்கள் திரும்பப்பெறப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 39 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
முன்னதாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்வது குறித்து மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்படும் என்பது எங்களின் உத்தரவாதம். பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். வனப்பாதுகாப்பு தொடர்பாக மோடி அரசு கொண்டுவந்த சட்ட திருத்தங்கள் திரும்பப்பெறப்படும் என்றார்.