சிவமொக்காவில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகள் மீறிய 655 பேர் மீது வழக்கு
சிவமொக்காவில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 655 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 655 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமுறை மீறல்
சிவமொக்கா டவுன் பகுதியில் போக்குவரத்து விதிமுறை மீறல் அதிகளவு நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இந்தநிலையில் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க சிவமொக்கா டவுன் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி டவுனில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முதல் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது கண்காணிப்பு கேமரா மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- சிவமொக்கா நகர போலீசார் மற்றும் மாநகராட்சி இணைந்து சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி) ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிகளை கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதாவது வாகன போக்குவரத்துகளை ஒழுங்குப்படுத்த முடிவு செய்துள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
இதற்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து, அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனைத்து இடங்களிலும் போலீசாரை நிறுத்தி போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முடியாது என்பதால், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி நகரில் உள்ள 14 முக்கிய சாலைகளில் 140-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை அடையாளம் காட்டி கொடுக்கும். குறிப்பாக சிக்னல் விதிமுறைகளை மீறுவது, அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி செல்வது, ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்வது, தடை செய்யப்பட்ட சாலைகளில் வாகனத்தை ஓட்டி செல்வது, வாகனங்களை நிறுத்துவது ஆகிய போக்குவரத்து விதிமுறைகளை இந்த கேமராக்கள் கண்காணித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும்.
655 பேர் மீது வழக்கு
அதை வைத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை சேகரித்து, உரிமையாளரின் முகவரியை அடையாளம் காண்பார்கள். பின்னர் போக்குவரத்து விதிமுறை தொடர்பான அபராத தொகை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
அந்த குறுந்தகவலில் உள்ள தேதிக்குள் அபராத தொகையை வாகன ஓட்டிகள் செலுத்தவேண்டும். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் சிவமொக்கா டவுனில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 655 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது சிக்னல் விதிகளை மீறி சென்றவர்கள் 613 பேர் மீதும், வாகனங்களை அதிவேகமாக ஓட்டி சென்ற 36 பேர் மீதும், மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன் எண்ணிற்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பறிமுதல்
போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க சிறப்பு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீற கூடாது. தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் கூறினார்.