காரில் கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்து கிராம மக்கள் ரகளை

ஓட்டு எந்திரத்தை மாற்ற வந்ததாக கருதி காரில் கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரத்தை கிராம மக்கள் உடைத்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதுதொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-10 20:41 GMT

பெங்களூரு, மே.11-

மசபினாலே கிராமம்

கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். குறிப்பாக முதியவர்கள், இளம்வாக்காளர்கள் தன்னார்வமாக வந்து ஓட்டளித்தனர்.

இந்த நிலையில் விஜயாப்புரா மாவட்டம் பசவன பாகேவாடி தாலுகா மசபினாலே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு கிராம மக்கள் வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் இருந்தனர்.

காைர சேதப்படுத்தினர்

அந்த சமயத்தில் ஒரு காரில் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரம்) ஆகியவற்றுடன் வாக்குச்சாவடி அமைந்திருந்த பள்ளி வளாகத்திற்குள் வந்தனர்.

அப்போது கிராம மக்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி முறைகேடு செய்யவே புதியதாக வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு வந்து இருப்பதாக கருதி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி அதிகாரிகள் அவர்களிடம் பேச முயன்றனர். ஆனால் அவர்களை பேசவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் திடீரென்று கற்கள், கட்டையால் காரை தாக்கினர். இதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதுடன் கார் சேதமடைந்தது.

வாக்கு எந்திரங்களை உடைத்து எறிந்து ரகளை

அத்துடன் ஆத்திரம் தீராத வாலிபர்கள், காரின் டிக்கியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பி.பேட் எந்திரங்கள் இருந்த பெட்டிகளை எடுத்து தரையில் வீசி எறிந்தனர். இதில் எந்திரங்கள் பெட்டியில் இருந்து வெளியே வந்து விழுந்தது. இதையடுத்து அந்த எந்திரங்களை பந்து போட்டு விளையாடுவது போல் தரையில் ஆக்ரோஷமாக தூக்கி வீசி தூள் தூளாக உடைந்து எறிந்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனால் அங்கு சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

23 பேர் கைது

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 23 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் அதிகாரிகள் வந்ததால், வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி முறைகேடு செய்ய வந்திருப்பதாக கருதி, கிராமத்தினர் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்