விதானசவுதாவுக்கு ரூ.10½ லட்சத்தை எடுத்து வந்தது ஏன்?; பொதுப்பணித்துறை என்ஜினீயர் பரபரப்பு தகவல்
பெங்களூருவில் விதானசவுதாவுக்கு ரூ.10½ லட்சத்தை எடுத்து வந்தது ஏன்? என்பது குறித்து பொதுப்பணித்துறை என்ஜினீயர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் விதானசவுதாவுக்கு ரூ.10½ லட்சத்தை எடுத்து வந்தது ஏன்? என்பது குறித்து பொதுப்பணித்துறை என்ஜினீயர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ரூ.10½ லட்சம் சிக்கியது
பெங்களூரு விதானசவுதாவுக்கு கடந்த 4-ந் தேதி மாலையில் ரூ.10½ லட்சத்துடன் மண்டியாவை சேர்ந்த பொதுப்பணித்துறை என்ஜினீயரான ஜெகதீஸ் வந்திருந்தார். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10½ லட்சத்தை பறிமுதல் செய்தார்கள். ஜெகதீஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் நேற்று முன்தினம் இரவு ஜெகதீஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விதானசவுதாவில் மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க பணத்தை என்ஜினீயர் எடுத்து வந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தார்கள். இதனால் ரூ.10½ லட்சம் விவகாரம் அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்திருந்தது. இந்தநிலையில், ஜெகதீசிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
காசோலை மோசடி வழக்கு
அதாவது மண்டியாவை சேர்ந்த ஜெகதீஸ், தொழில்அதிபரான மிருதுன்ஜெயா என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை அவர் கொடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து, என்ஜினீயர் ஜெகதீஸ் மீது கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கை மிருதுன் ஜெயா தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மிருதுன்ஜெயாவுக்கு ரூ.12 லட்சம் கொடுக்கும்படி ஜெகதீசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.12 லட்சத்தை மிருதுன்ஜெயாவிடம் கொடுக்க ஜெகதீஸ் முடிவு செய்தார். பின்னர் பெங்களூரு லிங்கராஜபுரத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரும், தனது உறவினரான சிவபிரசாத்திடம் கடன் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அவரும் ரூ.10 லட்சம் கடன் கொடுக்க சம்மதித்துள்ளார். அதன்படி, கடந்த 4-ந் தேதி மண்டியாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ஜெகதீஸ், சிவபிரசாத்திடம் இருந்து பணத்தை பெற்றுள்ளார்.
அதிகாரியை சந்திக்க வந்தார்
அந்த பணத்துடன் மண்டியாவுக்கு புறப்பட்டு செல்ல ஜெகதீஸ் தயாராகி உள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் விதானசவுதாவில் பணியாற்றும் அதிகாரியை சந்தித்து பேசுவதற்காக ஜெகதீஸ் உறவினரிடம் வாங்கிய பணத்துடன் விதானசவுதாவுக்கு வந்த போது போலீசாரிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி முதலிலேயே போலீசாரிடம், ஜெகதீஸ் தெரிவிக்காமல் இருந்ததுடன், ஆவணங்களை வழங்க காலஅவகாசம் கேட்டதுடன், விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் மவுனமாக இருந்து வந்தது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், ரூ.10½ லட்சம் சிக்கிய வழக்கில் ஜாமீன் கோரி பெங்களூரு கோர்ட்டில் ஜெகதீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விதானசவுதா போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.