நாடாளுமன்ற முடக்கம் குறித்து வெங்கையா நாயுடு கவலை

நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கவலை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-07-30 22:15 GMT

எதிர்க்கட்சிகள் அமளி

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் முறை கவலை அளிப்பதாக மாநிலங்களவையின் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கவலை தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் முறையை சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

விழாவில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

கவலை தரும் உண்மை

மாணவர்களுக்கு எதையும் கூறுவதற்கு முன்பு அவர்களுக்கு எனது முதல் அறிவுரை என்னவென்றால், இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையும், அன்பும் ஆகும்.

மாணவர்களுக்கு எனது 2-வது அறிவுரை, பணிவும் ஆகும். இதையே நான் எம்.பி.க்களுக்கும் கூறி வருகிறேன்.

ஏனெனில் நாடாளுமன்ற நாட்களில் அங்கு என்ன நடந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். நாடாளுமன்றம் தற்போதும் நடந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் எம்.பி.க்களின் நடவடிக்கையால் முடங்கி வருகிறது. இது கவலை தரக்கூடிய ஒரு உண்மை.

புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கையானது, சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்ட சரியான அடியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது அனைவராலும் எழுத்திலும் உணர்விலும் செயல்படுத்தப்பட வேண்டும். மிகவும் பயனுள்ளது.

மாணவர்களின் தொடக்கக்கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். ஒருவர் ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியையும் கற்கலாம். ஆனால் தாய் மொழியை மறக்கக்கூடாது.

நமது ஜனாதிபதி, நான், பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா போன்றவர்கள் யாரும் ஆங்கில வழி கல்வியில் பயின்றவர்கள் அல்ல. எனவே தாய்மொழிக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்