உத்தர்காசி சுரங்கப்பாதை சரிவு: 11வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்

தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.;

Update:2023-11-22 03:40 IST

உத்தர்காசி,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, கடந்த 12ம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அந்த பகுதியில் குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்க மீட்பு படையினர் இடைவிடாது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த பகுதிக்குள் துளையிட்டு இரும்பு குழாய்களை செலுத்தி அவற்றின் வழியாக தொழிலாளர்களை மீட்க திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக கனரக எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாறை அமைப்பு காரணமாக செங்குத்தாக துளையிடுவதில் சவால்கள் இருக்கின்றன. எனவே சுரங்கப்பாதைக்குள் இடிபாடுகளுக்கு இடையே குழாய்களை நுழைப்பதில்தான் பிரதானமாக கவனத்தைச் செலுத்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் விஷயமாக, தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், தண்ணீர், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்காக இடிபாடுகளுக்கு இடையே 4 அங்குல குழாய் பயன்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் 6 அங்குல குழாய், இடிபாடுகளுக்கு இடையே 53 மீட்டர் தூரத்துக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் சப்பாத்தி-குருமா, கஞ்சி, கிச்சடி, துண்டு போடப்பட்ட ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழங்கள் போன்ற அதிக அளவிலான உணவை அனுப்பக்கூடிய நிலை ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு செல்போன்களையும், சார்ஜர்களையும் அனுப்பலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, வாக்கி-டாக்கிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த குழாய் வழியாக, சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் ஓரளவு எளிதாக பேச முடிவதாக அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் தெரிவித்தனர்.

ஜெனீவாவைச் சேர்ந்த சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்டு டிக்சும் சுரங்கப்பாதை பகுதிக்கு வந்து ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கிவருகிறார். மீட்பு பணி நிலை குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை நேற்று தொடர்ந்து 2-வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு மீட்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் மீட்பு பணியின் 10-வது நாளான நேற்று முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. புதிதாக செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் வழியாக அனுப்பப்பட்ட ஒரு 'எண்டோஸ்கோபிக் கேமரா' மூலம் எடுக்கப்பட்ட தொழிலாளர்களின் முதல் வீடியோவை மீட்பு படையினர் நேற்று வெளியிட்டனர்.

டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட இந்த கேமரா, சுரங்கப்பாதை பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை வந்து சேர்ந்தது. இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில், சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் வெள்ளை, மஞ்சள் ஹெல்மட் அணிந்தபடி, உள்ளே அனுப்பப்பட்ட உணவுகளை பெற்றுக்கொள்வதும், ஒருவருடன் பேசியபடி இயல்பாக இருப்பதும் பதிவாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில், மீட்பு பணியில் பயன்படுத்துவதற்காக, ஒடிசா மாநிலம் ரூர்க்கேலா உருக்கு ஆலையில் இருந்து சிறப்பு தர இரும்பு குழாய்கள் சுரங்கப்பாதை பகுதிக்கு நேற்று முன்தினம் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டன. நேற்றும் அவ்வாறு குழாய்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் சுரங்கப்பாதையில் 11வது நாளாக மீட்புப்பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது உறுதியாகி இருப்பதால் மீட்பு பணி வேகம் எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்