உத்தர்காசி சுரங்க விபத்து: 41 தொழிலாளர்கள் இன்று காலை 8 மணிக்குள் மீட்கப்படுவர் - மீட்புக் குழு தகவல்

மீட்புப்பணிக்கான குழாய் 44 மீட்டர் வரை சென்றுள்ளது. மேலும் 12 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாக மீட்புக்குழுவில் இடம்பெற்றுள்ள ஹர்பல் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-22 19:55 GMT

உத்தர்காசி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4½ கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது. அப்போது உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அரசுத்துறையினர் இடைவிடாது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த பகுதிக்குள் இரும்பு குழாய்களை செலுத்தி, அதன் வழியே தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது.

ஆனால் துளையிடும் எந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை, குகைக்குள் மேலும் இடிந்து விழுவது போன்ற இடையூறுகளால், ஒரு வாரம் கடந்தும் தொழிலாளர்களை மீட்க முடியவில்லை. 22 மீட்டர் தூரத்துக்கு துளையிட்ட நிலையில் ஒரு கனமான தடை குறுக்கிட்டதால், அமெரிக்க எந்திரம் கொண்டு துளையிடும் பணி கடந்த வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பணி நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது.

மேலும் மாற்று நடவடிக்கைகளையும் மீட்பு படையினர் மேற்கொண்டனர். சுரங்கப்பாதையின் மேலே மலையில் இருந்து செங்குத்தாக துளையிடுவதற்கான பணிகளை தொடங்கினர். இதற்காக புதிதாக சாலை அமைக்கப்பட்டு, கனரக எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரம், இது 2-வது வழிதான் என்றும், குகைக்குள் கிடைமட்டமாக குழாய்களை நுழைப்பதில்தான் பிரதானமாக கவனம் செலுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதை பகுதிக்கு வந்த, ஜெனீவாவைச் சேர்ந்த சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்டு டிக்ஸ், மீட்பு நடவடிக்கைளை ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார்.

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தொடர்புகொண்டு மீட்பு பணி நிலவரம் குறித்து விசாரித்தார். அவரிடம், மீட்பு நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதால், தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக செலுத்தப்பட்ட 4 அங்குல குழாய்க்கு அடுத்து, மற்றொரு 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டது. அதன் வழியாக சப்பாத்தி, கிச்சடி, பழங்கள் போன்ற அதிகளவிலான உணவுகளுடன், ஒரு மைக்ரோபோன், ஒரு ஸ்பீக்கர் மற்றும் மருந்துகள், டீ-சர்ட்டுகள், துண்டுகள், உள்ளாடைகள், பற்பசை, சோப்பு போன்றவற்றையும் அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, நேற்று முன்தினம், இந்த குழாய் வழியே அனுப்பிய கேமராவால் எடுக்கப்பட்ட, தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியிடப்பட்டது. அதன் மூலம், சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரும் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிம்மதியையும், மீட்பு படையினருக்கு புதிய உத்வேகத்தையும் அளித்தது. தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

6 அங்குல குழாய் வழியாக, வயர் இணைப்புடன் மாற்று தகவல்தொடர்பு அமைப்பையும் தேசிய, பேரிடர் மீட்பு படையினர் ஏற்படுத்தினர். இதனால் தெளிவான தகவல் தொடர்புக்கு வழி ஏற்பட்டது. இந்த புதிய தகவல்தொடர்பு அமைப்பு மூலம் நேற்று காலை தொடர்புகொண்ட தொழிலாளர்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் வரை, குகைக்குள் இடிபாடுகளுக்கு இடையில் 45 மீட்டர் தூரத்துக்கு மீட்பு குழாய்கள் செலுத்தப்பட்டன. இது, இடிபாடுகளில் 67 சதவீத தூரம் என்பதால், மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 12 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டால் இப்பணி நிறைவு பெறும் என்று அவர்கள் கூறினர்.

இதனிடையே துளையிடும் எந்திரத்தின் சில பிளேடுகள் சேதம் அடைந்ததால் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை மாற்றும் பணி நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது. மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுரங்கப்பாதையையொட்டி தற்காலிக மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 8 படுக்கை வசதிகளுடன் 15 டாக்டர்கள் தயாராக இருந்தனர்.

12 ஆம்புலன்சுகளும், ஒரு ஹெலிகாப்டரும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் உத்தர்காசி மாவட்டத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளும், ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியும் உச்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 41 தொழிலாளர்கள் இன்று காலை 8 மணிக்குள் மீட்கப்படுவர் என்று மீட்புக் குழு தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோஜிலா சுரங்கப்பாதையின் திட்டத் தலைவரும், மீட்புக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான ஹர்பால் சிங், "NDRF மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. மீட்புப்பணிக்கான குழாய் 44 மீட்டர் வரை சென்றுள்ளது. மேலும் 12 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. தற்போது ஒரே தடையாக சில இரும்புத் துண்டுகள் உள்ளே வந்துள்ளன. இப்போது இரும்புத் துண்டுகள் வெட்டப்படுகின்றன.ஒரு மணி நேரத்திற்குள் இரும்புத் துண்டுகளை வெட்டி அடுத்த 5 மணி நேரத்தில் இரண்டு குழாய்களை உள்ளே தள்ளி காலை 8 மணிக்குள் மீட்புப் பணியை முடிக்க முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இன்று காலை 8 மணிக்குள் 41 தொழிலாளர்கள் மீட்கப்படுவர்" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்