உத்தரகாண்ட் நிலவரம்: 863 கட்டிடங்களில் விரிசல்; ரூ.3.27 கோடி நிவாரண தொகை அறிவிப்பு

உத்தரகாண்டில் ஜோஷிமத் போன்று, உத்தர்காஷி, தெஹ்ரி, பாவ்ரி மற்றும் கரண்பிரயாக் நகரங்களிலும் நிலம் பூமிக்குள் மூழ்கும் சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.

Update: 2023-01-22 06:28 GMT



டேராடூன்,


உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பை கொண்ட ஜோஷிமத் நகரில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் விட்டுள்ளன.

தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இமயமலை நகரம் என அழைக்கப்படும் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது.

உத்தரகாண்டின் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள், தலைநகர் டேராடூன், முசோரி சுற்றுலாத்தலம் போன்ற இடங்களில் பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது.

இந்த பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், அவ்வப்போது, நிலச்சரிவு, நிலநடுக்க சம்பவங்களும் காணப்படுகின்றன. இன்று காலை கூட உத்தரகாண்டின் பிதோராகார் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் வடக்கு வடமேற்கு பகுதியில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

அரசு அமைத்த உயர்மட்ட குழுவினர், ஜோஷிமத் பகுதியில் உள்ள மக்களை மீட்டு, நகராட்சி கட்டிடங்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்று தங்க வைத்துள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள நபர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. ஹீட்டர்கள், சுடு தண்ணீர் உள்ளிட்ட பிற வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன.

இதுபற்றி உயர்மட்ட அளவிலான பொறியியலாளர் நிவாரண முகாம்களில் உள்ள மின் வசதி உள்ளிட்டவற்றை மேற்பார்வை செய்ய அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

எனினும், ஜோஷிமத் நகரை போன்று, உத்தர்காஷி, தெஹ்ரி, பாவ்ரி மற்றும் கரண்பிரயாக் ஆகிய நகரங்களில் நிலம் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன.

உத்தரகாண்ட் நிலவரம் பற்றி மேற்பார்வை செய்யும் பணியில் சமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்சு குரானா சென்றுள்ளார். மாநில பேரிடர் பொறுப்பு படை மற்றும் போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

இதுபற்றி மாநில பேரிடர் மேலாண் துறை செயலாளர் ரஞ்சித் குமார் சின்ஹா கூறும்போது, இதுவரை 863 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட 218 குடும்பத்தினருக்கு ரூ.3.27 கோடி நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்