உத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்புப் பணியாளரின் வீடு இடிப்பு - புதிய வீடு வழங்குவதாக பா.ஜ.க. எம்.பி. உத்தரவாதம்

டெல்லி கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது வகீல் ஹாசனின் வீடு இடிக்கப்பட்டது.

Update: 2024-02-29 09:20 GMT

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை தோண்டும் பணியின்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர்.

அவர்களை மீட்பதற்கான பணியில் 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' (Rat Miners) எனப்படும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் சிறிய குகை போன்ற இடங்களுக்குள் சென்று இடிபாடுகளை அகற்றினர். இந்த மீட்புப் பணியில் வகீல் ஹாசன் என்ற தொழிலாளியும் ஈடுபட்டார்.

டெல்லி கஜோரி காஸ் பகுதியில் வகீல் ஹாசன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் டெல்லி மேம்பாட்டு ஆணையம் கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டது. இந்த இடிப்பு நடவடிக்கையில் வகீல் ஹாசனின் வீடு இடிக்கப்பட்டது.

இதனால் வகீல் ஹாசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சாலையோரத்தில் இரவு முழுவதும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், உரிய முன்னறிவிப்பின்றி தங்கள் வீடு இடிக்கப்பட்டதாக வகீல் ஹாசன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வகீல் ஹாசனுக்கு புதிய வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது வகீல் ஹாசனின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வகீல் ஹாசனுக்கு புதிய வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்