இந்தியாவில் 200 கோடி டாலர் செலவில் "விவசாய பூங்கா திட்டம்" ஐ2யு2 மாநாட்டில் அறிவிக்கப்படும் - அமெரிக்கா

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் நிதியுதவியுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தனியார் துறையின் ஆதரவுடன் இத்திட்டம் தொடங்கப்படும்.

Update: 2022-07-14 06:21 GMT

வாஷிங்டன்,

இந்தியா- இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து "ஐ2யு2" என்ற மாநாட்டின் முதல் பதிப்பு இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய தலைவர்கள் பங்கேற்கும் காணொலி வாயிலான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.

ஐ2யு2 கூட்டமைப்பின் முக்கிய அம்சமாக நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுபாதுகாப்பு ஆகிய 6 முக்கிய துறைகள் கண்டறியப்பட்டு, இத்துறைகளில் தனியார் முதலீடு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வது குறித்தும் மாநாட்டில் ஆராயப்படுகிறது.

இந்த மாநாட்டில், இந்தியாவில் 200 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான "விவசாய பூங்கா திட்டம்" இந்த உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் பகுதியளவு நிதியுதவியுடன் செயல்பட உள்ள இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் வழங்கும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அமெரிக்க தனியார் துறையின் ஆதரவுடன் இத்திட்டம் தொடங்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் 'ஒரு தனித்துவம் வாய்ந்த, கூட்டு முயற்சியாகும், இது உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும்' என்று நாங்கள் நினைக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்