ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியா வருகை

ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் டெல்லி வந்தடைந்தார்.

Update: 2023-03-02 01:01 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

இதில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேச கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் நள்ளிரவு தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அவர் இன்றைய ஜி20 கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இது தவிர அவர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை நடைபெறும் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.

பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி, அதிகரித்து வரும் பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைதல் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றை சமாளிக்கும் வழிகள் குறித்தும் வெளியுறவு மந்திரிகள் ஆலோசிக்க உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்