பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை தர வேண்டும்: ஜனாதிபதி சுதந்திர தின உரை

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2023-08-14 18:50 GMT

புதுடெல்லி,

சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று மாலை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, டெலிவிஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு துறையிலும் பெண்கள் அளப்பரிய சாதனை செய்து வருகிறார்கள். நாட்டுக்கு சேவையாற்றி, நாட்டின் பெருமையை உயர்த்தி வருகிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தற்போது ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

அதிகாரம்

பெண்களுக்கு பொருளாதாரரீதியாக அதிகாரம் அளிப்பதற்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பொருளாதார அதிகாரம், குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது.

ஆகவே, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை அளிக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். சவால்களை துணிச்சலுடன் முறியடித்து, வாழ்க்கையில் முன்னேறி செல்லுமாறு நமது சகோதரிகளையும், மகள்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கை, ஒரு மாற்றத்தை உருவாக்க தொடங்கி இருக்கிறது. நான் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் உரையாடிய வகையில், தேசிய கல்வி கொள்கை, கற்றல் திறனை எளிதாக்கி உள்ளது.

தொன்மையான பண்பாடுகளையும், நவீன திறன்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை, கல்வித்துறையில் முன்எப்போதும் இல்லாத மாற்றங்களை ஏற்படுத்தும். அதனால், நாட்டில் புரட்சிகரமான மாறுதல் ஏற்படும்.

ஒரே அடையாளம்

இந்தியர்கள் மாறுபட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், சாதி, மதம், மொழி, மாநிலம், தொழில் ஆகிய வேறுபாடுகளை தாண்டி ஒரே அடையாளம்தான் உள்ளது. அதுதான் இந்திய குடிமக்கள் என்பது ஆகும்.

அனைத்து இந்தியர்களும் சமம். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும், சம உரிமைகளும், சமமான கடமைகளும் உள்ளன.

உலக பொருளாதாரம் சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது. இருப்பினும், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பணவீக்கம் கவலைக்குரியதாக இருந்தாலும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்