உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி இல்லை; மாநில கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் பேட்டி

உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி இல்லை என்று மாநில கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-08-29 15:33 GMT

உப்பள்ளி;

உப்பள்ளி ஈத்கா மைதானம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் போன்று தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இதற்கு முஸ்லிம் அமைப்பினர் ஈத்கா மைதானம் தங்களுக்குரியது என்று போராட்டம் நடத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. அன்றுமுதல் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது ஈத்கா மைதானத்தில் விநாயர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கும்படி இந்து அமைப்பினர், தார்வார் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் தார்வார் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் நேற்று உப்பள்ளிக்கு வந்து பதற்றமான பகுதிகளில் ஆய்வு நடத்தினார். இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனுமதி இல்லை

வடகர்நாடக மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் ஈத்கா மைதானம் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்க உள்ள பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்