இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு

மத்திய பிரதேசத்தை சேர்ந்த உபேந்திர திவேதி ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

Update: 2024-06-30 20:49 GMT

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்து வந்த மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி நேற்று பொறுப்பேற்றார். இவர் இந்திய ராணுவத்தின் 30-வது தளபதி ஆவார்.

மத்திய பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட உபேந்திர திவேதி ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.

கடந்த 1984-ல் ஜம்மு-காஷ்மீர் காலாட்படையின் 18-வது படைப்பிரிவில் தனது ராணுவ சேவையை தொடங்கிய உபேந்திர திவேதி, பின்னர் அந்த படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார். கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் அவர் பல்வேறு படைப்பிரிவுகளில் தலைமை பதவி உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைமை தளபதியாக பதவியேற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்