உ.பி.: பயணிகளோடு பயணியாக... படுத்து கொண்டே திருட்டில் ஈடுபட்ட நபர்

ரெயில் பயணியின் பேண்ட் பையில் இருந்து ஒரு செல்போனை வெளியே எடுத்து வைத்து கொண்டு, அந்த காத்திருப்பு அறையில் இருந்து வெளியே செல்கிறார்.

Update: 2024-04-10 13:21 GMT

மதுரா,

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் சிலர் செல்போன்கள் காணாமல் போகின்றன என்றும் சிலர் விலையுயர்ந்த பொருட்களை காணவில்லை என்றும் புகார் அளித்தனர்.

இதுபற்றி ரெயில் நிலையத்தின் அரசு ரெயில்வே போலீசின் பொறுப்பு அதிகாரி சந்தீப் தோமர் விசாரணையை தொடங்கினார். இதற்காக, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. பயணிகளின் காத்திருப்பு அறையில் இருந்த ஒரு கேமிராவை ஆய்வு செய்தபோது, பயணிகள் சிலர் ஓய்வுக்காக தரையில் படுத்து கிடக்கின்றனர்.

அதில், ஒரு நபர் திடீரென அசைகிறார். அப்போது அந்த திடுக்கிடும் சம்பவம் நடந்தது. அந்த நபர், எவரேனும் தன்னை கவனிக்கிறார்களா? என சுற்றும்முற்றும் தலையை தூக்கி பார்க்கிறார். அப்போது, சிலர் கால்களை நீட்டி, புரண்டு படுக்கின்றனர்.

இதனால், இந்த நபர் சற்று காத்திருக்கிறார். அதன்பின்னர், தனக்கு வலதுபுறம் படுத்திருக்கும் நபரின் அருகே நகர்ந்து சென்று, தூங்கி கொண்டிருந்த பயணியின் பேண்ட் பைக்குள் கையை விடுகிறார். ஏதேனும் சிக்கல் ஏற்பட போகிறதா? என்றும் அடிக்கடி பார்த்து கொள்கிறார். பலமுறை பையில் இருந்து செல்போனை எடுக்க முயன்று, அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.

முதல் முயற்சி வெற்றியடைந்து விட்டது. செல்போன் கிடைத்து விட்டது. அடுத்து, வேறு ஒரு நபரை இலக்காக கொண்டு செயல்படுகிறார். மற்றொரு பயணி அருகே சென்று படுத்து கொள்கிறார்.

அவரை வேறு யாரும் கவனிக்கவில்லை என உறுதி செய்து கொள்கிறார். இதன்பின் அந்த பயணியின் பேண்ட் பையில் இருந்து ஒரு செல்போனை வெளியே எடுத்து வைத்து கொள்கிறார். அதன்பின்பு, அந்த காத்திருப்பு அறையில் இருந்து எழுந்து வெளியே செல்கிறார்.

இதுபற்றி ரெயில்வே போலீசார் உடனடியாக செயல்பட்டு, அந்நபரை அடையாளம் கண்டனர். அவர் இடா மாவட்டத்தில் வசித்து வரும் அவ்னீஷ் சிங் (வயது 21) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அந்நபரிடம் இருந்து ஒரு செல்போனையும் கைப்பற்றி உள்ளனர். இதுவரை 5 செல்போன்களை திருடிய விசயங்களை போலீசில் அவர் ஒப்பு கொண்டார். அவருக்கு எதிராக திருட்டு வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. அவர் திருடி வைத்திருக்கும் பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்