வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை - மத்திய அரசு அறிவிப்பு
வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள், இந்தியாவில் பயணிகளை ஏற்றிச்செல்லவோ, சரக்குகளை ஏற்றிச்செல்லவோ அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.
உரிய ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி, உரிய காப்பீட்டு பாலிசி, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஆகியவற்றை இந்த வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் ஆங்கிலத்தை தவிர வேறு மொழியில் இருந்தால், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.