'மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' - மத்திய மந்திரி வி.கே.சிங் அறிவிப்பு
புதிய வழிகளில் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புவதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய மந்திரியும், காசியாபாத் தொகுதி எம்.பி.யுமான வி.கே.சிங், எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான வி.கே.சிங், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைப்பதற்கு தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"ஒரு ராணுவ வீரனாக இந்த தேசத்தின் சேவைக்காக எனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக, காசியாபாத்தை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற அயராது உழைத்தேன்.
இந்தப் பயணத்தில், காசியாபாத் மக்கள் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களிடமிருந்து நான் பெற்ற நம்பிக்கை மற்றும் அன்புக்கு நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த உணர்வுபூர்வமான பிணைப்பு எனக்கு விலைமதிப்பற்றது.
இந்த உணர்வுகளுடன், நான் கடினமான, ஆனால் சிந்தனைமிக்க முடிவை எடுத்துள்ளேன். 2024 தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவு எனக்கு எளிதானது அல்ல, ஆனால் நான் ஆழமாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது ஆற்றலையும், நேரத்தையும் புதிய திசைகளில் கொண்டு செல்ல விரும்புகிறேன். இதன் மூலம் எனது நாட்டிற்கு வேறு வழியில் சேவை செய்ய முடியும்.
இந்த பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துகின்றன. முன்னோக்கிச் செல்லும்போது, நாட்டிற்கும் அனைத்து குடிமக்களுக்கும் எனது சேவையை புதிய வடிவில் வழங்குவேன்."
இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.