'பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசவிடாமல் மத்திய உள்துறை மந்திரி தடுத்துவிட்டார்' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மாணவர்களை அடிமைகளாக மாற்ற விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2024-01-23 08:21 GMT

Image Courtesy : @INCIndia

கவுகாத்தி,

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில், நடை பயணமாகவும், பேருந்திலும் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

இதனிடையே அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர்களுடன் ராகுல் காந்தியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக வளாகம் அருகே ராகுல் காந்தியின் யாத்திரை வாகனம் வந்தபோது அங்கு மாணவர்கள் குவிந்தனர்.

இதையடுத்து தனது வாகனத்தின் மீது ஏறி நின்றவாரு மாணவர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நான் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்ற விரும்பினேன். ஆனால் அதற்கு முன் மத்திய உள்துறை மந்திரி, அசாம் முதல்-மந்திரியை அழைத்து பேசியுள்ளார். பின்னர் அசாம் முதல்-மந்திரி பல்கலைக்கழக தலைவரை அழைத்து ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.

இங்கு ராகுல் காந்தி வருவதும், வராததும் முக்கியமல்ல. நீங்கள் விரும்பும் நபருடைய பேச்சை நீங்கள் கேட்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நீங்கள் விரும்பியபடி வாழ அனுமதிக்கப்பட வேண்டும், மற்றவர்கள் விரும்புவது போல் அல்ல.

இது அசாமில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்திலும் நடக்கிறது. அவர்கள் உங்களை அடிமைகளாக மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் யாராலும், பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அதை செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும்."

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்