பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமானதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் - ராகுல்காந்தி
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமானதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என ராகுல்காந்தி கூறினார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கருணாகப்பள்ளியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் இதுவரை கண்டிராத அளவு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. நான் இப்போது கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சாலைகளில் நடந்து வருகிறேன். நான் இளைஞர்களை கடக்கும் போது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்பேன். அதில் பாதிே்பர் எந்த வேலையும் இல்லை என்றும், மற்றவர்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சி இல்லை என்றும் கூறினார்கள்.
ஒரு இந்தியர் தற்போது உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்று செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். இந்தியர் ஒருவர் உலகின் இரண்டாவது பணக்காரர் என்றால், அதே நாட்டில் அதிக வேலையின்மை உள்ளது?
கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை இல்லாததற்கு காரணம், இந்த நாட்டில் உள்ள பணக்காரர்களான 5 அல்லது 6 தொழிலதிபர்களை பாதுகாப்பதிலும், ஆதரிப்பதிலும் மட்டுமே அரசாங்கம் ஆர்வம் காட்டுவதுதான். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், ஒவ்வொன்றாக, விலக்கி தனியார் மயமாக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் யாரிடம் செல்லப் போகின்றன? மற்றவை எல்லாம் யாரிடம் செல்கின்றனவோ அதே 5 அல்லது 6 தொழிலதிபர்களிடம்தான் போகப் போகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.