உப்பினங்கடியில், ஒரே இரவில் துணிகரம் அடுத்தடுத்து 7 கடைகளில் புகுந்து திருட்டு

உப்பனங்கடியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 7 கடைகளில் புகுந்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-01 18:45 GMT

மங்களூரு-

உப்பனங்கடியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 7 கடைகளில் புகுந்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

7 கடைகளில் திருட்டு

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி டவுன் வங்கி தெருவில் கடை வீதி அமைந்துள்ளது. அங்கு ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், அங்குள்ள மருந்து கடை, மரச்சாமான்கள் கடை, மளிகைக்கடை, ஓட்டல் உள்ளிட்ட 7 கடைகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள், அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வியாபாரிகள் வழக்கம் போல கடைக்கு வந்தனர்.

வங்கியில் புகுந்து...

அப்போது கடைகளின் கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனா். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் மாயமாகி இருந்தது. 7 கடைகளில் அடுத்தடுத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. மேலும் அங்குள்ள வங்கிக்குள்ளும் மர்மநபர்கள் புகுந்துள்ளனர். ஆனால், பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால், திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்றிருந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் உடனடியாக உப்பினங்கடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரே நாள் இரவில் 7 கடைகளில் அடுத்தடுத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்