3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இந்தியா வருகை
3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை தர உள்ளார்.
புதுடெல்லி,
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் 2-வது முறையாக ஐ.நா.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு பின் அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை.
இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபரில் தனது முதல் பதவிக்காலத்தில் அவர் இந்தியா வந்திருந்தார்.
3 நாள் பயணமாக இந்தியா வரும் ஆண்டனியோ குட்டரெஸ் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அதன் பின்னர் அவர் மத்திய வெளியறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
வருகிற 20-ந்தேதி குஜராத்தின் கேவாடியாவில் நடக்கும் 'மிஷன் லைப்' (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கலந்துகொள்வார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அடுத்த வாரம் இந்தியாவில் 2 நாள் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய தகவல்கள் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.