உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கு விசாரணையை சி.ஐ.டி. போலீசார் தொடங்கினர்

உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து வழக்கு தொடர்பாக நேற்று சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Update: 2023-08-08 18:45 GMT

உடுப்பி-

உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து வழக்கு தொடர்பாக நேற்று சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவி ஆபாச வீடியோ

உடுப்பி மாவட்டம் அம்பலபாடியில் உள்ளது தனியார் பாராமெடிக்கல் கல்லூரி. இந்த கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள், கல்லூரி கழிவறையில் செல்போன் கேமராவை வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கல்லூரி நிர்வாகமும் அவர்களை இடைநீக்கம் செய்தது. மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றார்.

அப்போது சில ஆதாரங்கள் கிடைத்ததாக கூறினார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்பினருக்கு போலீசார் மற்றும் மகளிர் ஆணைய விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று கூறினர். சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் மாநில அரசு விசாரணை அதிகாரியாக இருந்த மல்பேவை சேர்ந்த, மஞ்சுநாத் என்பவரை விடுவித்து, குந்தாபுரா துணை போலீஸ் சூப்பிரண்டு பெள்ளியப்பாவை நியமித்தது.

சி.ஐ.டி. போலீசார் விசாரணை

இவரது விசாரணையிலும் நம்பிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மாநில அரசு நேற்று முன்தினம் இந்த வழக்கை சி.ஐ.டி.போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. இதற்காக அஞ்சுமாலா தலைமையிலான போலீசார் நியமிக்கப்பட்டனர். இந்த சி.ஐ.டி. போலீசார் நேற்று உடுப்பி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கல்லூரி கழிவறைக்கு சென்ற போலீசார் கேமரா வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். பின்னர் கல்லூரியை சுற்றி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதை வைத்து சி.ஐ.டி.போலீசார் அடுத்த கட்ட விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்