சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நவம்பர் 9-ந்தேதி பதவி ஏற்கிறார்.

Update: 2022-10-17 22:43 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், நவம்பர் 8-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவரது தலைமை நீதிபதி பதவிக்காலம் வெறும் 74 நாட்கள் ஆகும்.

அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யும்படி தற்போதைய தலைமை நீதிபதியிடம் மத்திய சட்ட மந்திரி கேட்பது வழக்கம்.

அதன்படி, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதினார். அதற்கு யு.யு.லலித், தனக்கு அடுத்த மிக மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை சிபாரிசு செய்தார். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

50-வது தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவர் நாட்டின் 50-வது தலைமை நீதிபதி ஆவார்.

இதுகுறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தனது 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் சட்டம் அளித்த அதிகாரப்படி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை புதிய தலைமை நீதிபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்த நியமனம், நவம்பர் 9-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நவம்பர் 9-ந்தேதி, புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதிவரை அப்பொறுப்பில் இருப்பார்.

 

Tags:    

மேலும் செய்திகள்