காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை சுட்டு கொலை
காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை மற்றும் அவரது உறவினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புத்காம்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் ஹஷ்ரூ சதூரா என்ற தனது வீட்டில் அம்ரீன் பட் என்ற பெண் இருந்து வந்துள்ளார். காஜிர் முகமது பட் என்பவரின் மகளான அம்ரீன் பட் தொலைக்காட்சி நடிகையாகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்களான 3 பயங்கரவாதிகள் அம்ரீனின் வீட்டில் வைத்து அவரை துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் அம்ரீனின் உறவினரான 10 வயது மருமகனையும் சுட்டு உள்ளனர். இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதில் அம்ரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க போதிய வார்த்தைகள் இல்லை.
அம்ரீன் பட் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மருமகன் விரைந்து குணமடைய வேண்டி கொள்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.