ஒடிசாவுக்கு மாற்று வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டது: பெங்களூரு எஸ்.எம்.வி.டி. ரெயில் முனையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பெங்களூருவில் இருந்து ஒடிசாவுக்கு மாற்று வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டதால், அதில் ஏறி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி. ரெயில் முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-06-05 21:17 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் இருந்து ஒடிசாவுக்கு மாற்று வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டதால், அதில் ஏறி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி. ரெயில் முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ரெயில்கள் விபத்து

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி தெரிவித்துள்ளார். ஒடிசா ரெயில்கள் விபத்தால், பெங்களூருவில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில்கள் விபத்து நடைபெற்ற அடுத்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

இதனால் பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்தவர்கள் எஸ்.எம்.வி.டி. (சர்.எம். விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம்) ரெயில் முனையத்தில் சிக்கி தவித்தனர். சுமார் 1,500 பேர் அந்த ரெயில் முனையத்தில் சிக்கித்தவித்த நிலையில் மாற்று வழித்தடத்தில் ஹவுரா உள்ளிட்ட சில வடமாநில நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதனை பயன்படுத்தி பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். எனினும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தவறியவர்கள், நேற்று முன்தினம் முன்பதிவு செய்தனர்.

2 ரெயில்கள் ரத்து

இதையடுத்து நேற்று பெங்களூருவில் இருந்து ஒடிசாவுக்கு விரைவு ரெயில் ஒன்று புறப்பட்டது. அதில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் ஏறி சென்றனர். இதன்காரணமாக நேற்று சர்.எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெங்களூரு- ஒடிசா இடையே மாற்று வழித்தடத்தில் நேற்று முதல் ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் பெங்களூரு-பகானகா பஜார் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 8 ரெயில்களில், ஹவுரா நோக்கி செல்ல வேண்டிய 2 ரெயில்கள் (வண்டி எண்:12246, 12864) ரத்து செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்