உடுப்பியில் சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிப்பு

உடுப்பி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து கலெக்டர் வித்யாகுமாரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Update: 2023-09-04 18:45 GMT

மங்களூரு-

உடுப்பி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து கலெக்டர் வித்யாகுமாரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சுற்றுலா தலங்கள்

உடுப்பி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் ஆன்மிக தலங்களும் இருக்கின்றன. இதுதவிர கடற்கரையும் அமைந்துள்ளது. இதனால் உடுப்பி மாவட்டத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகளை வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வித்யாகுமாரி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆலோசித்து முடிவு

உடுப்பி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகள் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சில சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளும், தடை உத்தரவும் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உடுப்பி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மழை பொழிவு குறைந்த பிறகு இந்த கட்டுப்பாடுகளையும், தடையையும் விலக்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆகும்பே வனப்பகுதி சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது பற்றி சிவமொக்கா மாவட்ட கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருவரும் ஆலோசித்து முடிவு எடுத்து பின்னர் இதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்