தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாநில முழுவதும் 80 ஆயிர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகம், தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைவான மழையே பெய்திருப்பதால் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) உள்ளிட்ட அணைகள் நிரம்பாததால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால் காவிரி படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பை நடத்தி இருந்தனர். இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி (அதாவது இன்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. காவிரி நதிநீர் விவகாரம் மட்டுமின்றி, மகதாயி நதிநீர் பிரச்சினை உள்பட கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களில் மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், அதனால் அகண்ட கர்நாடக முழு அடைப்பு நடத்துவதாகவும் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
முழு அடைப்புக்கு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், சங்கங்கள் உள்ளிட்ட 1,900 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை 10 மணியளவில் பெங்களூரு டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்புக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், கர்நாடக முழு அடைப்பு காரணமாக பெங்களூரு, மண்டியா, மைசூரு, துமகூரு, ராமநகர், ஹாசன், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்படுகிறது. பால், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டு இருக்கும். பெங்களூருவில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது.
முழு அடைப்புக்கு கர்நாடக சினிமா வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருப்பதால், இன்று தியேட்டர்கள் திறக்கப்படாது என்றும், எந்த விதமான சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட உள்ளது. நகைக்கடைகளும் மூடப்படுகின்றன. பெங்களூருவில் ஆட்டோக்கள், வாடகை கார்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்று ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படாது.
நடைபாதை வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து, நடைபாதை கடைகள், ஓட்டல்கள் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரெயில்கள் மட்டும் பெங்களூருவில் எப்போதும் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளதால், இன்று(வெள்ளிக்கிழமை) அரசு பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் முழு அடைப்பின் நிலைமையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பின் காரணமாக பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு, பெங்களூரு புறநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் முழு ஆதரவு இருப்பதால், அந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட உள்ளது. அதுபோல், வடகர்நாடக மாவட்டங்கள், சிவமொக்கா, உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் முழு அடைப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
கர்நாடக முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கர்நாடக முழு அடைப்பையொட்டி எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹிதேந்திர நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கம்பெனி அதிவிரைவு படையினர் மற்றும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த கர்நாடக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பெங்களூரு, மண்டியா, மைசூரு, உப்பள்ளியில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜி.க்கள், போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட அனைத்து போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாநிலத்தில் அனைத்து போலீசாரும் பணியில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதிவிரைவு படையுடன், 250 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை மற்றும் நகர ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக எலலை பகுதிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். முழு அடைப்பின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
20 நாட்களில் 3-வது முழு அடைப்பு
பெங்களூருவில் கடந்த 20 நாட்களில் 3-வது முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அதாவது அரசு பஸ்ககளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கு எதிராக பெங்களூருவில் கடந்த 11-ந்தேதி தனியார் வாகனங்கள் சார்பில் முழு அடைப்பு நடந்திருந்தது. காவிரி நதிநீர் பிரச்சினை காரணமாக கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் மீண்டும் முழு அடைப்பு நடந்திருந்தது. இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் 3-வது முறையாக முழு அடைப்பு நடைபெறுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதை குறிப்பிடத்தக்கது.
தேர்வுகள் தள்ளிவைப்பு
கர்நாடகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இன்று பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான 2-வது மற்றும் 4-வது செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் மாதம் 1-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இதுபோல், தாவணகெரே, பெலகாவி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலெக்டர்கள் முடிவு
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெற உள்ளது. முழு அடைப்பு காரணமாக பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இதுபோல், மற்ற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.