பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூல்

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Update: 2023-03-13 22:17 GMT

பெங்களூரு:

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இன்று முதல் சுங்க கட்டணம்

ரூ.8,480 கோடியில் பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி விரைவுச்சாலை நிறுவப்பட்டுள்ளது. இதில் 6 வழிச்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதன் இருபுறத்திலும் தலா 2 வழிச்சாலை சர்வீஸ் சாலையாக விடப்பட்டுள்ளது. அந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கிடையாது. இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்று காலை 8 மணி முதல் சுங்கக்கட்டண வசூல் அமலுக்கு வருகிறது. சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் கட்டணம் வசூலிக்கும்.

கனரக வாகனங்கள்

பெங்களூருவில் இருந்து நிடகட்டா இடையே ஒரு சுங்கச்சாவடியும், மைசூரு அருகே ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விரைவுச்சாலையை பயன்படுத்தும் கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக (55 கிலோ மீட்டர்) ரூ.135, பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ரூ.460, மிக கனரக வாகனங்கள் ரூ.750 முதல் ரூ.900 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு காரில் சென்றால் அவர்கள் கட்டணமாக ரூ.270 செலுத்த வேண்டும். இந்த சுங்க கட்டணம் மிக அதிகம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்த விவசாயிகள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அந்த சுங்க சாவடியில் ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை கட்டணம் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்