ரூ.140 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்...!!
லண்டன் ஏல நிறுவனத்தில் மன்னர் திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் ரூ.140 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டது.
லண்டன்,
இன்றைய மைசூருவை 1782-ம் ஆண்டில் இருந்து 1799-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மன்னர் திப்பு சுல்தான் ஆவார். இவர் மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர்.
இவர் பயன்படுத்தி வந்த படுக்கையறை வாள், லண்டன் மாநகரில உள்ள பான்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது. இந்த வாள் 16-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட ஜெர்மனி பிளேடு வடிவமைப்பைப் பயன்படுத்தி முகலாய வாள்வீரர்களால் உருவாக்கப்பட்டது. கடவுளின் ஐந்து குணங்கள் இதன் கைப்பிடியில் சிறப்பாக தங்க எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாளில் மன்னரின் வாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.140 கோடிக்கு ஏலம்
இந்த வாள், 14 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.140 கோடி) விலைக்கு ஏலம் விடப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இது 7 மடங்கு அதிகம். அதே நேரத்தில் ஏலத்தில் இந்த வாளை வாங்கியவர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. அதை ஏல நிறுவனம் அறிவிக்கும் வழக்கமும் இல்லை.
இதுபற்றி பான்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தின் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை மற்றும் ஏலப்பிரிவின் தலைவர் ஆலிவர் ஒயிட் கூறியதாவது:-
திப்பு சுல்தானுடன் தொடர்புடைய அனைத்து ஆயுதங்களிலும் இந்த கண்கவர் வாள் மிகப் பெரியது ஆகும். இது திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு வைத்திருந்தது. இது சிறந்த கைவினைத்திறன் கொண்டது. இது தனித்துவமானது. மிகவும் விரும்பத்தக்கது
.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பான வரலாறு
இந்த வாள் பற்றி பான்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தின் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை மற்றும் ஏலப்பிரிவின் பொறுப்பாளர் நிமா சாகர்ச்சி பெருமிதப்பட்டார். அவர் கூறும்போது, "இந்த வாளுக்கு ஒரு சிறப்பான வரலாறு இருக்கிறது. இது வியக்கத்தக்க ஆதாரம். நிகரற்ற கைவினைத்திறன் கொண்டது. 2 தொலைபேசி ஏலதாரர்களுக்கும், ஒரு நேரடி ஏலதாரருக்கும் இடையே இது மிகவும் பரபரப்பான போட்டியை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் இல்லை. இதன் காரணமாக நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என குறிப்பிடடார்.
வீரத்துக்காக...
திப்பு சுல்தான் 4-ம் மைசூர் போரில் கொல்லப்பட்டபிறகு இந்த வாள், தாக்குதலுக்கு ஆணையிட்ட இங்கிலாந்தின் மேஜர் ஜெனரல் டேவிட் பயர்டுக்கு அவரது வீரத்துக்காக வழங்கப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன.