பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மணிப்பூரில் பெண்கள் போராட்டம்

மணிப்பூரில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மெய்தி இன பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-12 00:56 GMT

Photo Credit: PTI

இம்பால்,

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 3 மாதங்களை கடந்தும் கலவரம் இன்னும் ஓயவில்லை.  இதனிடையே மணிப்பூரில் குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததோடு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் மணிப்பூரில் மேலும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் தெரியவந்தது.  கடந்த மே மாதம் 3-ந்தேதி நடந்த கலவரத்தின்போது சூரச்சந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான 37 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்த பிறகே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது மணிப்பூரில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று மணிப்பூரில் மெய்தி இன பெண்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.  மேற்கு மற்றும் கிழக்கு இம்பால், பிஷ்ணுபூர், காக்சிங் மற்றும் தவுபால் ஆகிய 5 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மெய்தி பெண்கள் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதமேந்திய போராளிகள் மற்றும் மியான்மரில் இருந்து ஊடுருவியவர்களால் பெண்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்கள் அரங்கேற்றப்படுவதாக குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்