ரூ.11 லட்சம் மதிப்பிலான காரை பழுது பார்க்க ரூ.22 லட்சமா?- அதிர்ச்சியடைந்த உரிமையாளர்- நடந்தது என்ன?
'காரின் மொத்த விலை ரூ.11 லட்சம்தான், இதை பழுது பார்க்க ரூ.22 லட்சமா' என உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.;
பெங்களூரு,
கடந்த மாதம் முழுவதுமே பெங்களூரில் பெருவெள்ளம் சூழ்ந்திருந்தது. குறிப்பாக பல இடங்களில் முழங்கால் உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் எண்ணற்ற மக்கள் அவதியடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் உள்பட அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடங்கின.
இந்த பெரு வெள்ளத்தால் தரை தளத்தில் வீடுகளை வைத்திருந்தவர்களும் வாகனங்களை நிறுத்தியவர்களும் மிகுந்த பாதிப்புகளை எதிர்கொண்டனர். பல கார்கள் பகுதியளவுக்கு நீரில் மூழ்கியதால் சேதம் அடைந்தன. இதனால் பலருக்கு மிகுந்த பொருட்செலவு ஏற்பட்டது.
இதில் பெங்களூருவை சேர்ந்த அனிருத் கணேஷ் என்பவரின் வோக்ஸ்வேகன் போலோ கார் பழுதடைந்தது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள சர்வீஸ் மையத்திற்கு தனது காரை சர்வீஸ் செய்ய அனிருத் அனுப்பியுள்ளார்.
அனிருத் தனது காரை விட்டு வந்த 20 நாள்களுக்குப் பிறகு சர்வீஸ் மையத்தில் இருந்து, `தங்களின் கார் முழுவதுமாக சேதமாகிவிட்டது, சரிசெய்ய ரூ.22 லட்சம் செலவாகும்' என்று அனிருத்துக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனைக்கேட்ட அனிருத், `காரின் மொத்த விலை ரூ.11 லட்சம்தான். இதை பழுது பார்க்க ரூ.22 லட்சமா' என்று அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இதற்கிடையே, அனிருத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகினார். கார் முழுவதும் பாதிக்கப்பட்டதாகக் கருதி, அதை அவர்கள் திரும்ப எடுத்துக் கொள்வதாக கூறியிருக்கின்றனர். ஆனால் கார் சேதத்தை, மொத்த இழப்பாக எழுதி சர்வீஸ் மையத்தில் இருந்து சான்றிதழ் வாங்கி வரும்படி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கூறியுள்ளனர். ஆனால், சர்வீஸ் மையத்தில், வாகனத்தின் பழுதுகளுக்கு சான்றளிக்க ரூ.44,840 செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக வோக்ஸ்வேகன் நிறுவனத்தை இமெயில் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அனிருத் அணுகினார். ஆனால், வெகு நாட்களாக எந்தப் பதிலும் இல்லை. தொடர் முயற்சிகளின் பலனாக, வாகன பழுது சான்றளிப்பதற்கான கட்டணம் ரூ.44,840 என்ற மதிப்பில் இருந்து ரூ.5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் அனுப்பியுள்ளனர். இந்த அனைத்து தகவல்களையும் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனிருத், இந்த தகவல் அனைவருக்கும் உதவிகரமாக இருக்குமென நம்புவதாக தெரிவித்துள்ளார்.