12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவியல் ஆலோசனை கிடைக்கவில்லை; மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேட்டி

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அறிவியல் பூர்வமான ஆலோசனை கிடைக்கவில்லை என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

Update: 2022-07-14 22:05 GMT

பெங்களூரு:

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விஞ்ஞானிகள் ஆலோசனை

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விஞ்ஞானிகளிடம் இருந்து எந்த அறிவியல் ஆலோசனையும் அரசுக்கு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி நாங்கள் முடிவு எடுக்கிறோம். 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. வரும் நாட்களில் விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும்.

75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவையொட்டி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடுப்பூசி வழங்கும் பணி நாளை (அதாவது இன்று) தொடங்கி 75 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும். இது பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கொரோனாவுக்கு எதிராக போராடவும் உதவும்.

6 தடுப்பூசிகள்

இந்தியாவில் 6 நிறுவனங்கள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகின்றன. தினந்தோறும் 20 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு, கோர்போவேக்ஸ், எம்.ஆர்.என்.ஏ., டி.என்.ஏ. ஆகிய 6 தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் உலக நாடுகளின் மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற முடியும். உர பற்றாக்குறை பிரச்சினை என்பது உலக அளவில் இருக்கிறது. அதனால் அவற்றின் விலை அதிகரிக்கிறது. ரஷியா-உக்ரைன் போரால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, உர பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். விவசாயிகள் மீது விலை உயர்வு சுமையை சுமத்த வேண்டாம் என்றும் கூறி இருக்கிறார்.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்