சீனா செல்ல விருப்பம் இல்லை, இந்தியாவில் இருக்கவே விருப்பம் - தலாய் லாமா

இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன், சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்று திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

Update: 2022-12-19 09:59 GMT

சிம்லா,

சமீப காலமாக அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய - சீனப்படை மோதல் நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவ தரப்பில் கூறப்பட்டது.

மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, கூறுகையில்,

தற்போது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் நிலைமை மேம்பாட்டு வருகிறது. சீனாவுக்கு வளைந்துகொடுக்கும் தன்மை உண்டு. ஆனால் நான் சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை. இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன். அதுதான் என் இடம். காங்க்ரா - நேருவின் விருப்பம். இது எனது நிரந்தர குடியிருப்பு என்றார்.

திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க சீனா தயாராக இல்லை. 1959-ல் திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தலாய் லாமா தஞ்சம் புகுந்தார். அப்போது முதல் இந்தியாவில் தான் இருந்து வருகிறார். தொடர்ந்து திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்