"புதிய மது கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை" - மணீஷ் சிசோடியா
புதிய மது கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில், துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுக்கப்பட்டது. அக்கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், டெல்லி ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த சட்ட விதிமீறல்கள் குறித்து டெல்லி தலைமை செயலாளர் அறிக்கை அளித்ததன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். அதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபிகிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், மின்னணு பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மணீஷ் சிசோடியா, அரவா கோபிகிருஷ்ணா, ஆயத்தீர்வை முன்னாள் துணை ஆணையர் ஆனந்த்குமார் திவாரி, ஆயத்தீர்வை முன்னாள் உதவி ஆணையர் பங்கஜ் பட்நாகர், 9 தொழிலதிபர்கள் மற்றும் 2 கம்பெனிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
மதுபான உரிமம் பெறுபவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் நோக்கத்திலேயே உரிய ஒப்புதல் இல்லாமல், மணீஷ் சிசோடியாவும், இதர அரசு அதிகாரிகளும் முடிவு எடுத்ததாகவும், மணீஷ் சிசோடியாவின் கூட்டாளியான தினேஷ் அரோரா உள்ளிட்டோர் மதுபான உரிமம் பெற்றவர்களிடம் லஞ்சம் வசூலிக்கும் பணியை கவனித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுபான உரிமம் பெற்ற சமீர் மகேந்துரு என்ற தொழிலதிபரிடம் இருந்து தினேஷ் அரோரா ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாகவும், மதுவிலக்கு விதிகளில் திருத்தம் செய்தல், உரிம கட்டணத்தை குறைத்தல் போன்றவை மூலம் முறைகேடு நடந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, புதிய மது கொள்கையை அமல்படுத்தியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் அடுத்த ஒரு சில நாட்களில் சி.பி.ஐ. தன்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.