குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக்கும் எண்ணம் இல்லைபசவராஜ் பொம்மை பேட்டி
கூட்டணி அமைத்தாலும் குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக்கும் எண்ணம் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.;
மங்களூரு-
கூட்டணி அமைத்தாலும் குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக்கும் எண்ணம் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவுக்கு சம்பந்தம் இல்லை
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மங்களூருவுக்கு வந்தார். மங்களூருவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதாவில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான சைத்ரா குந்தாபூருக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளி யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். மடாதிபதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். பா.ஜனதாவில் சீட்டுக்காக பணம் கேட்கப்படுவதாக கூறப்படுவதை நாங்கள் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளோம். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக்க...
பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இன்னும் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை எட்டவில்லை. கட்சி மேலிடம் எங்களிடம் பேசி முடிவு எடுப்பார்கள்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக்கும் எண்ணம் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
உறுதியான நிலைப்பாடு
கர்நாடகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. பருவமழை பொய்த்தபோதே மாநில அரசு விழித்திருக்க வேண்டும். ஆனால் அரசு வறட்சி அறிவிப்பை தள்ளிக் கொண்டே செல்கிறது. மாநில விவசாயிகளின் நலனில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை. விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. அவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதத்தில் தமிழக அணையில் தண்ணீர் அதிகமாகவே இருந்தது. தமிழகத்தில் காவிரி படுகையில் 1.80 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய வேண்டும். ஆனால் விதியை மீறி 4 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்துள்ளனர். இதனை அரசு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழகத்தின் அழுத்தத்துக்கு பணிந்து படிப்படியாக தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசு எடுத்தால் நாங்கள் ஆதரிப்போம். இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.