சோம்பேறியாக இருந்த கணவரை வேலைக்கு அனுப்ப வினோதமாக சிந்தித்த பெண் சிறையில் கம்பி எண்ணுகிறார்
வீட்டிேலயே சோம்பேறியாக இருந்த கணவரை வேலைக்கு அனுப்ப வினோதமாக சிந்தித்த பெண் தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறையில் கம்பி எண்ணும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.;
பெங்களூரு :-
போலீசில் புகார்
பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதாவது அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த பெண், மல்லேசுவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் ஒன்று அளித்தார். அதில், தான் ஸ்கூட்டரில் வெளியே சென்றபோது, சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றேன். அப்போது மர்மநபர்கள் எனது ஸ்கூட்டரை திருடி சென்றுவிட்டனர். அந்த ஸ்கூட்டரில் தங்க நகைகள் உள்ளன என்று கூறினார்.
இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புகார் கொடுத்த பெண்ணின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கணவரை வேலைக்கு செல்ல...
இதையடுத்து போலீசார், அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது பெண்ணின் கணவர், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வருமானம் இன்றி அவர்கள் தவித்துள்ளனர். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கணவரை வேலைக்கு செல்ல வைக்க அந்த பெண் திட்டம் தீட்டினார். அதாவது, நகைகள் திருட்டு போனதாக கூறினால் கணவர் வேலைக்கு செல்வார் என அவர் எண்ணினார். இதையடுத்து தனது திட்டப்படி, வங்கி லாக்கரில் இருந்த தனது நகைகளை நண்பர் தனஞ்ஜெய் மற்றும் அவரது கூட்டாளி ராகேஷ் ஆகியோர் உதவியுடன் திருடிவிட்டு போலீசில் பொய்யான புகார் அளித்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து சொந்த நகைகளை திருடிய பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த தனஞ்ஜெய் மற்றும் ராகேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.